மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் மகளிர் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென ஒரு அறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மற்ற அறையில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர். இருப்பினும், இந்த விபத்தில் வாடிப்பட்டியில் தனியார் பள்ளியில் பணிபுரிந்த பரிமளாசுந்தரி (50), மற்றொரு ஆசிரியை சரண்யா(22) ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்த விபத்தால் ஏற்பட்ட கரும்புகையில் சிக்கி சிலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட விடுதி அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையானது, பயன்படுத்த உகந்தது அல்ல என்று கூறி கட்டிடத்தை இடிக்குமாறு மதுரை மாநகராட்சி கடந்த ஓராண்டுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பியும் கூட அந்தக் கட்டிடம் இயங்கிவந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாரும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். முறையான மாநகராட்சி அனுமதி, சுகாதாரத் துறை அனுமதி, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று,காவல்துறையின் அனுமதி என்று எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டு வந்துள்ளது. விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் பலியான நிலையில் பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூச்சு முட்டுது காப்பாத்து அண்ணா…விடுதிக்குள் சிக்கிய பெண் கதறும் ஆடியோ வெளியாகி பலரையும் கலங்கடித்துள்ளது.