Homeதமிழ்நாடுமகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் புதுசாக விண்ணப்பிக்கலாம்.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் புதுசாக விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் தமிழக அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி அடிப்படையில் குடும்பத் தலைவிகள் மாதம் தோறும் ரூ.1000 பெற்று வருகின்றனர்.

அரசு அறிவித்த இந்த தகுதிப் பட்டியலுக்குள் வராத பலர் விண்ணப்பிக்கவில்லை. எனவே சுமார் ஒரு கோடியே 63 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் பொருளாதார தகுதி வரையறைக்குள் வந்தவர்கள் என முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52ஆயிரம் பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காதவர்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேல்முறையீடு செய்ய அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் சில லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். ஆனால் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்கள், புதிய ரேஷன் அட்டைதாரர்கள் என பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அரசு அறிவித்த பொருளாதார தகுதி வரையறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுகின்றன. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் பலரும் திமுக தலைவர்களை சூழ்ந்து இது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு விண்ணப்பித்த அனைவரும் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று உறுதி தந்தார்.

.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்த பின் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்தவர்களில் 1 இலட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்