மாணவர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
அந்த வகையில், இத்திட்டத்திற்கு விண்ணபிக்க தேவையான ஆவணங்களை அரசு வெளியிட்டதோடு, மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அவர்களை ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் எண் எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று வழிகாட்டியுள்ளது.
மேலும், ஆதார் மையங்கள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர் கல்விக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கும் இந்த திட்டம், அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுமைப்பெண் திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு 30,000 மாணவிகள் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 20-25% கல்லூரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் உயர் கல்வி கற்பதை அதிகரிக்கும் விதமாக, தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள், பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை உள்ளிட்டவற்றை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிடும் விதமாக மாதம் தோறும் 1000 ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடப்பு நிதியாண்டில் ரூ.360 கோடி நிதியையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கி இருக்கிறது.