கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்டெம்செல் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மைய திறப்பு விழா நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று மையத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கு என்ன செய்ய போகிறோம் என்று நினைப்பவர்களாக உருவாக வேண்டும்.
கற்றல் திறனை, செயல் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கற்றல் திறன் அதிகரித்தால் தேர்வு எழுதும்போது உதவியாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய அளவில் 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் முன்னிலையில் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் முதன்முறையாக ஆகஸ்டு 24-ம் தேதி திரவ, திட எரிபொருள் இருண்டும் கலந்து செய்யப்பட்ட ராக்கெட் சிறிய செயற்கைக் கோள்களுடன் விண்ணுக்கு அனுப்பும் முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதில் கிணத்துக்கடவு பள்ளியில் இருந்து 50 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.மாணவர்கள் பாடங்களை படிப்பதை தாண்டி செய்முறைகளை செய்வது அவசியம். மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு உலக அளவில் போட்டி உள்ளது.
பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க அரசு உதவ முன் வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.