Homeதமிழ்நாடுமதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு! நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடையாது தண்டனையை குறைக்கவும் முடியாது.

மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு! நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடையாது தண்டனையை குறைக்கவும் முடியாது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இவர் தன்னிடம் படித்த மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழி நடத்த முயன்றதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்தனர். அவருக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள். ஆனாலும் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் கோர்ட்டு விசாரித்தது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர், பேராசிரியர்கள், மாணவிகள், அவர்களின் பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகி, சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 29, 30-ந்தேதிகளில் அளிக்கப்பட்டது.

இதில், பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பின் அடிப்படையில் நிர்மலா தேவியை மதுரை சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்த தண்டனையை எதிர்த்து பேராசிரியை நிர்மலாதேவி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு எனக்கு வழங்கிய தண்டனை சட்டவிரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். முதல்கட்டமாக தண்டனையை நிறுத்தி வைத்து, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரருக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கவோ, ஜாமீன் வழங்கவோ முடியாது என் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

சற்று முன்