புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மன அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்ததால், ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இசிஜி உள்ளிட்ட அடிப்படை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ரத்த உறைவு இருக்கிறதா என்பதையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மூன்றாவது நாளாக நேற்று இருதயம் தொடர்பாக பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு தாெடர்ந்து கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி உடல் நலம் குணமடைந்ததால் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.