தமிழகத்தைப் போலவே புதுவையிலும் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஆனால், இதர மாநிலங்களை விட புதுச்சேரியில் மின் கட்டணம் அதிகமாக வசூலிப்பதால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதைச் சுட்டிக்காட்டும் விதமாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் கோவணம் கட்டி வந்து மின் கட்டணம் செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதர மாநிலங்களைவிட புதுச்சேரியில் மின் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை கண்டித்து அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. சமூக ஆர்வலர்கள் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டும் வகையில் நூதன முறையில் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி உப்பளத்திலுள்ள மின்துறை அலுவலகத்துக்கு சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர்ராஜன், கோவணம் கட்டி, நாமம் போட்டு இன்று மின் கட்டணம் செலுத்த வந்தார். அவர் வரிசையில் நின்று மின்கட்டணம் செலுத்தினார்.
அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் மின் கட்டணம் கடுமையாக உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மின் துறையை தனியார் மயமாக்கவில்லை என்று சொல்கிறார்களே தவிர, மின் கட்டண பில்லில் மறைமுகமாக ஏராளமான கட்டணங்களை வசூல் செய்கிறார்கள். 5 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டில் இருப்பவர்கள் ரூ.3 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. குஜராத், டெல்லி, பஞ்சாப் என பல மாநிலங்களில் மின்கட்டணத்தில் சலுகைகள் உள்ள நிலையில் புதுச்சேரியில் மட்டும் ஏன் இவ்வளவு வரி போடுகிறார்கள் என தெரியவில்லை.” என்றார்.
மேலும், “மின் இணைப்பு பெற டெபாசிட் கட்டியுள்ளோம். அது எங்கு போனது? அதன் வட்டியே மின்துறைக்கு போதுமானது. மின்துறை எப்படி நஷ்டமாகும்? நஷ்டம் எனக்கூறியே மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள். இன்னும் உயரப் போவதாகச் சொல்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாளில் மின் கட்டணத்தின் மூலம் மக்களின் கோவணத்தைக்கூட உருவிவிடுவார்கள், ஜாக்கிரதை என்பதை தெரிவிக்கவே இப்படி கோவணத்துடன் மின் கட்டணம் செலுத்த வந்தேன்” என்றார். மின்கட்டணம் செலுத்த வந்தவர் கோமணத்துடன் நின்றதால், அங்கு வந்திருந்த மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது