Homeதமிழ்நாடுஎம் ஆர் விஜயபாஸ்கரை தேடி வரும் சிபிசிஐடி!

எம் ஆர் விஜயபாஸ்கரை தேடி வரும் சிபிசிஐடி!

கரூர்- மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், வெள்ளியணை பிரகாஷ் மகள் ஷோபனா, செட்டில்மென்ட் மூலம் தமது சொத்தை கிரையம் செய்ய சார்பதிவாளர் அலுவலகம் வந்திருந்தார். ஷோபனாவுடன் ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் என 4 பேரும் சார்பதிவாளர் அலுவலகம் வந்தனர். ஆனால் சொத்து வெள்ளியணை சார்பதிவகத்துக்குட்பட்டது; அசல் ஆவணமும் கொண்டுவரவில்லை. இதனால் பத்திரப் பதிவு செய்யாமல் நிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அசல் ஆவணம் காணவில்லை என சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையம் கொடுத்த சிஎஸ்ஆர் நகல் என்னிடம் கொடுக்கப்பட்டது. ஷோபனா தரப்பில் யுவராஜ், பிரவீன் இதனை கொடுத்தனர். வெள்ளியணை சார்பதிவக அலுவலக மதிப்பு அறிக்கையுடன் கடந்த மே 10-ந் தேதி இந்த சொத்து கிரையம் செய்யப்பட்டது. ரூ100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலம் இது. ஆனால் ஷோபனாவின் தந்தை பிரகாஷோ, போலி சான்றிதழ்கள் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளதாக புகார் மனுவை மறுநாளே என்னிடம் கொடுத்தார். அதில், தோரணக்கல்பட்டி- குன்னம்பட்டியில் தமக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கரூர் மாவட்ட பதிவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் அசல் ஆவணம் காணவில்லை என சான்றிதழ் தரவில்லை என தெரியவந்தது. ஆகையால் போலி சான்றிதழ் கொடுத்துதான் பத்திரம் பதிவு செய்தது உறுதியானது. இதனால் கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். தற்போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என கோரியிருந்தார்.

இதனால் கரூர் போலீசார் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தாமும் கைது செய்யப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாகிவிட்டார். மேலும் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தள்ளுபடி செய்தார். இதனையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 தனிப்படைகளும், வெளிமாநிலத்தில் 3 தனிப்படைகளும் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை தேடி மொத்தம் 5 தனிப்படைகளை அமைத்தது சிபிசிஐடி.

சற்று முன்