காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை ஒட்டி, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகளில் இருந்து, வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் 8 மணிக்கு வினாடிக்கு 81,552 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று (ஜூலை 27) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 93,828 கன அடியாக உயர்ந்தது.
தொடர்ந்து, காலை 9 மணியளவில் அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியை நெருங்கியது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு 95.50 அடியாக இருந்தது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 100 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் 16 கண் மதகினை நீர் தொட்டது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இதை அடுத்து 16 கண் மதகு பகுதியில் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, பூக்களை தூவி காவிரி நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது, மேட்டூர் நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதிஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் வினாடிக்கு ஆயிரம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் 120 அடி வரை நீரை தேக்கிவைக்க அனுமதிக்கப்படுகிறது. இது 93 டிஎம்சி ஆகும். கடந்தாண்டு ஜூலை 17ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. அதன் பின்னர், 405 நாட்களுக்குப் பின்னர், நேற்று 100 அடியை தாண்டியது. 90 ஆண்டுகால அணை வரலாற்றில் 71 வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 2005-2006ம் ஆண்டு, மேட்டூர் அணை நீர்மட்டம் 428 நாட்கள் தொடர்ந்து 100 அடியாக நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.70 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 1,18,296 கன அடியாக உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகாரிப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 67.06 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணை நிரம்பி வரும் நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.