Homeதமிழ்நாடுநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது:-
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை ஏலத்தில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வு செல்லுமா? என்பதே இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், அதனடிப்படையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மாணவர்களை சேர்ப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, சட்டவிரோதமாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. அதன் காரணமாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகளை மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி வைத்துள்ளன.

இத்தகைய சூழலில் செல்லுமா, செல்லாதா? என்றே தெரியாத ஒரு தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது எந்த வகையில் நியாயம்? மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் சார்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலே போதுமானது, மதிப்பெண்களைப் பற்றி கவலைப்படாமல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் ஒதுக்கப்படும், மாணவர்கள் அவர்களின் விவரங்களை மட்டும் வழங்கினால் போதுமானது, பல்கலைக்கழக நிர்வாகமே கலந்தாய்வுக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, மத்திய அரசால் நடத்தப்படும் கலந்தாய்வின் மூலம் கண்டிப்பாக இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும், முன்கூட்டியே பதிவு செய்து முன் தொகை செலுத்துவோருக்கு ரூ.5 லட்சம் வரை கட்டண சலுகை வழங்கப்படும் என்றெல்லாம் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனியார் பல்கலைக்கழகங்களின் இத்தகைய செயல்பாடுகள் புதிதல்ல. நீட் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் நடைபெற்று வருபவை தான். தகுதி மற்றும் தரவரிசையைப் பற்றிக் கவலைப்படாமல் அணுகும் மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவ இடங்களை ஒதுக்குவது எவ்வாறு சாத்தியம்? நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட பணம் இல்லாத மாணவர்களால் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் செலுத்தி சேர முடியாது. அதே நேரத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும் பணம் இருந்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் தனியார் கல்லூரிகளை அணுகும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இடம் ஒதுக்குகின்றன. இது சமூக அநீதி ஆகும்.

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் ஓராண்டில் கூட இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படவில்லை. மருத்துவக் கல்வி வணிகமயமாவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு இனியும் தொடரக்கூடாது. எனவே, நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சற்று முன்