- Advertisement -
தமிழ்நாடு

நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் தமிழக அரசுக்கு, அண்ணாமலை எக்கச்சக்க கேள்வி.

இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு, கருணை மதிப்பெண் விவகாரம், முழு மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் குளறுபடிகள் இல்லை என்று மறுத்த மத்திய அரசு பிறகு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தியது. இந்த வருடம் நீட் தேர்வை சரியாக நடத்தவில்லை. தவறு நடந்திருக்கிறதா என்றால் ஆம் தவறு நடந்துள்ளது. மத்திய அரசு இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான பணிகளையும் ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் தேர்வுகளில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. அதற்காக எந்த குரூப் தேர்வுகளையும் நாம் ரத்து செய்தது இல்லை. அதே சமயம் நீட் விவகாரத்தில் என்டிஏ தலைவரை மாற்றியுள்ளனர். மறுபுறம் நீட் தேர்வு தேவையா என்றால் தமிழ்நாட்டுக்கு கண்டிப்பாக தேவை. ஏனெனில் இந்த வருடம் தமிழகத்தில் 59 சதவிகிதத்துக்கு அதிகமானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானம் போடும் தமிழக அரசு ஏன் வெள்ளை அறிக்கை தர மறுக்கிறது. நீட் தேர்வு வருவதற்கு முன்பும் பின்பும் எத்தனை பேர் அரசுப் பள்ளியில் இருந்து படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தருவதற்கு தமிழக அரசுக்கு என்ன பிரச்னை?

நீட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் செல்ல மறுப்பது ஏன்?. ஏனெனில் தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்ட மறுக்கின்றனர். எதுவும் முடியாது என்று தெரிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நாடகம் நடத்தி வருகின்றார்” என்று குற்றம்சாட்டினார்.

- Advertisement -
Published by