சேலம் கருமந்துறையை அடுத்த வேளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழங்குடியின மாணவி சுகன்யா. இவர் கரியகோயில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். மூன்று வயதில் தனது தாயை இழந்த சுகன்யா, லட்சுமணன் – சின்னபொண்ணு பெற்றோராய் ஏற்று அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் முதன்மை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு படிநிலைகளிலும் வெற்றி பெற்றதன் வாயிலாக, மாணவி சுகன்யா திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (National Institute of Technology) பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இந்த வெற்றி குறித்து மாணவி சுகன்யா கூறுகையில், “எனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சரியான முறையில் எனக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர். சாதிச்சான்று கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்தேன். ஆனால், ஆசிரியர்கள் உதவியால் எனக்கு சாதிச் சான்றிதழ் கிடைத்தது. பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு படித்தேன்.
அதனால், இந்த தேர்வில் வெற்றி பெற்றேன். எந்த தோல்வியும் நிரந்தரமானது அல்ல, மாணவர்கள் தைரியமாக தேர்வுகளை எதிர்கொண்டு எழுதி வெற்றி பெற வேண்டும். எனக்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியல் (Production Engineering) படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.