Homeதமிழ்நாடுபடுக்கை வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்.

படுக்கை வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதும், படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

முதற்கட்டமாகப் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்களைக் குறைந்த தொலைவு கொண்ட விரைவு ரயில் சேவைகளில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மிக நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலைவிட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் கூடுதல் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் உள்ள பிஎம்எல் நிறுவனத்தில் இந்த ரயில் தயாரிக்கப்பட்ட நிலையில், அண்மையில் ஐசிஎஃப் ஆலைக்கு மாற்றப்பட்டது. இங்கு ரயிலின் வடிவமைப்பில் ஒரு சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்பின், லக்னௌவில் உள்ள ரயில்வே தரம் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்துக்குச் சோதனைக்காக அனுப்பப்பட்டு, அங்கு ரயிலின் இயக்கம், பிரேக்கிங், கட்டுப்பாடு எனப் பலகட்ட சோதனைகள் முடிந்த பிறகு ரயில் சோதனை ஓட்டத்துக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.

அனைத்து சோதனைகளும் 2 மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, ஜன.15-ஆம் தேதி ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின், ரயிலைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இயக்குவது குறித்து ரயில்வே வாரியம் முடிவெடுக்கும் என்று இந்திய ரயில்வே தரப்பில் கூறப்பட்டிருந்தது.

முதல்கட்டமாக 16 ஏசி பெட்டிகள் கொண்டு 10 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒரு ரயில் தயாரிக்க ரூ.120 கோடி செலவாகிறது. ரயிலின் முதல் வகுப்பில் (ஒரு பெட்டி) 24 பயணிகள், இரண்டாம் வகுப்பில் (4 பெட்டிகள்) 188 பயணிகள், மூன்றாம் வகுப்பில் (11 பெட்டிகள்) 611 பயணிகள் என மொத்தம் 823 போ் பயணிக்க முடியும் என்றும் ரயில்வே வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் கவாச் பாதுகாப்பு அம்சத்துடன் உருவாக்கப்படுகிறது. ரயில் மற்றும் தண்டவாளம் என இருபுறமும் கவாச் செயல்பாட்டில் இருக்கும் போதுதான் பயன்படுத்த முடியும். தற்போது தயாரிக்கப்படும் அனைத்து ரயில்களும் கவாச் பாதுகாப்புடன் அமைக்கப்படுகிறது. அதுபோல், ரயில்வே சாா்பில் அனைத்து தண்டவாளத்திலும் கவாச் அமைப்பதற்கான பணியும் நடந்து வருகிறது.

படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயிலின் சிறப்பு:

ஏசி முதல்வகுப்பில் குளியலறை வசதி
மாற்றுத்திறனாளிகளுக்கு என நான்கு சிறப்பு இருக்கைகள்
ரயிலில் பயணிக்கும் பயணிகள் ஏதேனும் அவசரம் எனில் ஓட்டுநரைத் தொடா்பு கொள்ளும் வசதி
அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள்
ஏதேனும் பேரிடா் என்றால் பயணிகளுக்கு எச்சரிக்கை விளக்கு
ரயில் முழுவதும் சிசிடிவி கேமரா
கைப்பேசிக்கான யுஎஸ்பி சாா்ஜிங் செய்யும் அமைப்பு.

சற்று முன்