Homeதமிழ்நாடுஜூலை முப்பத்தி ஒன்றாம் தேதிக்குள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்.

ஜூலை முப்பத்தி ஒன்றாம் தேதிக்குள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் நெல், சோளம், துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு என 14 வேளாண் பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வாழை, மரவள்ளி கிழங்கு, வெங்காயம், உருளைக் கிழங்கு, கேரட், கத்திரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைக் கோஸ் போன்ற 12 தோட்டக்கலைப் பயிர்களுக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

2024ம் ஆண்டு குறுவை பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கான விவசாயிகள் பதிவு 2024 ஜூன் 21 ஆம் தேதி முதல் ஒன்றிய அரசின் தேசிய பயிர்காப்பீட்டு வலைதளத்தில் மேற்கோள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “ இதில் முக்கிய பயிரான குறுவை நெற்பயிரை 2024 ஜீலை 31 ஆம் தேதி வரை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்” என்றும் கூறினார்.

தொடர்ந்து, “விவசாயிகள் அருகிலுள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உரிய காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி கடைசி தேதி வரை காத்திருக்காமல் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் அதாவது ஜூலை 31ஆம் தேதிக்குள் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுங்கள்.

புயல், வெள்ளம் போன்றவற்றால் பயிர் சேதம் அடைந்த பிறகு அந்த பயிரை காப்பீடு செய்ய இயலாது. காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை எக்காரணம் கொண்டும் நீட்டிக்க வழிவகையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “விவசாயிகள் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, வங்கிக் பாஸ் புக்கின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கி கிளைகளையோ அணுகுங்கள். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் மாவட்டங்களில் அறிவிக்கை செய்த பகுதிகளில் அறிவிக்கை செய்த பயிர்களைக் காப்பீடு செய்து பயன்பெறுங்கள்” என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சற்று முன்