உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த அனிருதா போஸ் ஏப்ரல் மாதமும், போபண்ணா மே மாதமும் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதனால் தலைமை நீதிபதி உள்பட 32 நீதிபதிகள் தற்போது உள்ளனர்.காலியாக உள்ள 2 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப கொலிஜியம் முடிவு செய்தது. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும், மூத்த நீதிபதிகளாகவும் உள்ள 10 பேர் கொண்ட தகுதி வாய்ந்த நீதிபதிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான முடிவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் எடுத்துள்ளது.
கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பு ஏற்றுக்கொள்வர்.