தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் 5-ம் தேதி வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதாவது, ‘சரியான இடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்’.’இறக்கு கூலி வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும்’ உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. இதனால் இன்று (செப்டம்பர் 5) ரேஷன் கடைகள் இயங்காது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் பொது விநியோகத் திட்டம். இந்தத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. இவற்றை களையக் கோரி பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்துள்ளோம். குறிப்பாக, சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் 100 சதவீதம் ஒதுக்க வேண்டும்.
வெளிமாவட்ட வெளியூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 10 சதவீதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் உரிய காலத்தில் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். பாமாயில், துவரம் பருப்பு விநியோகத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஏற்படும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளில், நடமாட்டப் பணியாளர் நியமித்து எடை தராசு வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை இறக்குவதற்கு கட்டாய இறக்குக் கூலி வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் எஃப்.பி.எஸ் செயலி மூலம் ஆய்வு செய்வதை கைவிட்டு, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5-ம் தேதி ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.