சேலம் – கொச்சி நெடுஞ்சாலை (NH 544) பகுதியில் மதுக்கரை அருகே கடந்த வெள்ளி அன்று நள்ளிரவு நடைபெற்ற வழிப்பறி சம்பவத்தின் எதிரொலியாக, அப்பகுதியில் சோதனை சாவடி அமைக்கவும், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு வசதிகளை அதிகப்படுத்தவும், காவல்துறை ரோந்து பணிகளை அதிகரிக்கவும் கோவை மாவட்ட காவல்துறை திட்டமிட்டு வருகிறது.
தகவல்கள் படி, இந்த நெடுஞ்சாலையில், நீலாம்பூர் – வாளையாறு இடையேயான சாலைப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. குறிப்பாக நீலாம்பூர் – மதுக்கரை இடையே அதிகம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படுகிறதாம். இங்கு சாலையின் இருபுறமும் காலி இடங்கள் மட்டுமே இருக்கின்றன. வாகனங்கள் நகர்வை தவிர இங்கு கடைகள், மக்கள் நடமாட்டம் என எதுவும் இல்லை என்பதால் இங்கு துணிந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறதாம்.
எனவே இங்கு சோதனை சாவடி அமைத்து வாகன சோதனைகள் நடத்துவது, இந்த வழியே ரோந்து பணிகளை அதிகரிப்பது பற்றி காவல் துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த வழிப்பறி சம்பவத்தில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவதாஸ் (29), ரமேஷ் பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) ஆகிய 4 பேரை இதற்கு முன்னர் கைது செய்திருந்தனர். நேற்று 5 ஆவது நபரான பாலக்காட்டை சேர்ந்த விஷ்ணுவை (28) மடக்கி பிடித்தனர். இன்னும் 5 பேரை தேடி வருகின்றனர்.