Homeதமிழ்நாடுதமிழக சட்டப்பேரவையில் மு க ஸ்டாலின் காரசார பேச்சு!

தமிழக சட்டப்பேரவையில் மு க ஸ்டாலின் காரசார பேச்சு!

தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது:

“சட்டப் பேரவை விதிமுறைப்படி, கேள்வி நேரம் முடிந்த பிறகுதான் மற்ற பணிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதை பொருட்படுத்தாமல் உடனடியாக கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு பெரிய ரகளையை செய்திருக்கிறார்கள்.

கேள்வி நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி பிரச்னையைதான் விவாதிக்கப் போகிறோம் என சபாநாயகர் தெளிவாக சொல்லியும், அதையும் மீறி, அவர்கள் (அதிமுக) வேண்டுமென்ற திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்று இதனை செய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு சபாநாயகர் அவர்களை அவையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்.

தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இந்த காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். வேறொன்றுமில்லை.. 40-க்கு 40… அது அதிமுகவினரின் மனதை, கண்ணை உறுத்துகிறது. அதை மக்களிடமிருந்து எவ்வாறு மாற்றுவது என்பதற்காக திட்டமிட்டு இந்த காரியத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் நீதியரசர் கோகுல் தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர், டிஜிபி-யை அங்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சொல்லியிருக்கிறேன். குற்றவாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் சிலர் தேடப்பட்டு வருகிறார்கள். கள்ளச்சாராயம், விஷச்சாராயம் விழிப்பு நடவடிக்கை தொடர்கிறது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார். எஸ்பி, காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு ஏடிஜிபி கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் 24 மணி நேரத்துக்குள் அரசு எடுத்துள்ளது.”

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சற்று முன்