Homeதமிழ்நாடுசீமானுக்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை.

சீமானுக்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியினால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14 சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்” என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எஸ்.பி வருண்குமாரின் இந்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் (நா.த.க) ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்தநிலையில், ‘தமிழ்நாட்டிற்கு நாம் தமிழர் கட்சி தேவை’ என்று கூறி சீமானுக்கு ஆதரவாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து மோதல் விவகாரம் காவல்துறை – பொலிடிகல் பார்ட்டி என மாறாமல், காவல்துறையினர் அவர்கள் வேலையை செய்யட்டும், அரசியல் கட்சியினராகிய நாம் காவல்துறையின் அரணாகவும், பாதுகாப்பாகவும் இருப்போம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை பேசுகையில், “தமிழகத்தின் முக்கியமான குரல் சீமான் நாம் தமிழர் கட்சியின் அரசியல் தமிழ்நாட்டிற்கு தேவை. நான் எப்பொழுதும் காவல்துறை அதிகாரிகளை ஆதரித்து பேசுவேன் என்பது உங்களுக்கு தெரியும் ஏனென்றால் நானும் அத்துறையில் பணியாற்றியுள்ளேன்.

அதே நேரத்தில் சீமான் அவர்கள் முக்கியமான அரசியல் கட்சித் தலைவர். ஒரு பிரிவினைவாத இயக்கம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அவர்களுடைய சித்தாந்தம் வேறு. அதனை மக்களிடமும் முன் வைக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் அங்கீகாரம் கொடுக்கலாமா வேண்டாமா என்பது மக்களின் முடிவு எலக்ஷன் கமிஷன் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர். கோர்ட்டில் எந்த வழக்கும் இல்லை.

காவல்துறையை பொருத்தவரை அரசியல்வாதிகளிடமிருந்து கொஞ்சம் ஒதுங்கி இருப்போம். சகோதரர் வருண் காவல்துறை அதிகாரியாக இருக்கும் நிலையில் அவர் அவருடைய வேலையை செய்யட்டும். அதே நேரத்தில் அண்ணன் சீமான் அவர்கள் மிகவும் உயர்ந்தவர், பெரிய தலைவர். எனவே சீமான் இதனை பெரிது படுத்த வேண்டாம். காவல்துறை அதிகாரி ஒரு கருத்தை சொல்கிறார் அவ்வளவுதான். எனவே சீமான் அவர்கள் பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும் நான் அட்வைஸ் எல்லாம் செய்யவில்லை”. அதே நேரத்தில் காவல் துறை அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

சற்று முன்