சென்னை மாநகராட்சியில் வரும் ஜூலை 10ஆம் தேதி தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட இருக்கின்றது, இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் அடுத்த மூன்று மாதத்தில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் எனவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் பெற்றுக் கொள்ளலாம், சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி அதில் கேட்கப்படும் விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் வெறி நாய் கடி, நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் புகைப்படம் ஆகியவற்றை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உறுதி மொழியை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இதனை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்த பிறகு அங்கீகாரம் வழங்கி பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படுகின்றது,
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், 2018ம் ஆண்டிற்கு பிறகு தெரு நாய் கணக்கெடுப்பு எடுக்கப்பட உள்ளது. இதில் நாய்கள் ஆணா, பெண்ணா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் கண்டறியப்படும்.கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 100 நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 7,165 நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டுள்ளது. 7 முதல் 8 ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு இருக்கிறது.
100 இல் 5 நாய்கள் அதிக வெறி தன்மை கொண்டதாக உள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி நாய்களைப் பிடித்தாலும் மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என கட்டாயம் உள்ளது.
தெரு நாய்கள், செல்லப்பிராணிகளால் பிரச்சனை ஏற்படுவது உண்மையாக உள்ளது. நடைமுறையில் மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூறி, அடுத்த பத்து நாட்களுக்குள் தன்னார்வலர்கள், கால்நடை துறையினர் உள்ளிட்டோருடன் இணைந்து கூட்டம் நடைபெற உள்ளதாக அவர் பேசினார்.