Homeதமிழ்நாடுசெந்தில் பாலாஜி ஐ சி யூ வில் அனுமதி

செந்தில் பாலாஜி ஐ சி யூ வில் அனுமதி

2023ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனை நடைபெற்றது. நள்ளிரவு தொடர்ந்தும் சோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். நீதிமன்ற அனுமதி பெற்று அவர் காவேரி மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை முடிந்து சில நாள்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திஹார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஓர் ஆண்டுக்கு மேலாகியும் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையில் உள்ள நிலையில் அவர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு ஜாமீன் கோரினார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்று பிற்பகல் உணவுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை நலிவடைந்துள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டதாக அவர் கூறிய நிலையில் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

இது ஒருபுறமிருக்க செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ஜூலை 29-க்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி வழக்கில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், குற்றச்சாட்டு பதிவை ஒத்திவைக்க அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததை ஏற்று, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்