அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமின் கோரியும், விசாரணைக்கான காலக்கெடு குறித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கேட்டும், செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது.
கடந்த ஆண்டு செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதிரடி காட்டியது. ஆனாலும் இதுவரை விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஏற்கெனவே 330 நாட்கள் சிறையில் உள்ளார். மேலும், அமலாக்கத்துறை வேண்டுமென்றே இந்த வழக்கை கால தாமதம் செய்வதாக செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கால அவகாசம் கோரியதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜால் புய்யான் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
நாளை மறுநாள் ஜூலை 12 ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.