Homeதமிழ்நாடுசெந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் ஆஜராக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்க அமலாக்கத்துறை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்; இந்த வழக்கில் மத்திய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது எனக் கூறினர். மேலும் சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கையை ஏற்று இன்று கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி ஓகா தெரிவித்தார். அதன்படி வழக்கில் இன்று மாலை தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சற்று முன்