Homeதமிழ்நாடுஸ்டாலின் தேநீர் விருந்தை புறக்கணிக்காததற்கு காரணம் இதுதான். உதயகுமார் விமர்சனம்.

ஸ்டாலின் தேநீர் விருந்தை புறக்கணிக்காததற்கு காரணம் இதுதான். உதயகுமார் விமர்சனம்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, கல்லுப்பட்டி, பேரையூர் ரோட்டில் உள்ள சிவன் கோயில் அருகே நடைபெற்றது. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசியது: “இன்றைக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. அதைக் காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய அமைச்சர், “முல்லைப் பெரியாறு அணை உடைந்து விட்டால் கேரளா என்ன ஆகும்?” என்று கூறுகிறார். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று பாதுகாப்பு குழு வல்லுநர்கள் கூறியதை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும்கூட கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமை. அப்படியிருந்தும் முல்லை பெரியாறு அணை குறித்து முதல்வர் வாய் திறக்காமல் மவுன சாமியாராக தான் உள்ளார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை?

கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால், அந்த விழாவுக்கு மத்திய அமைச்சர், இணையமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள். இதுவரை பாஜக எதிர்ப்பாளராக தன்னை காட்டிக் கொண்ட திமுகவும், அதன் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டவிட்டது. என் அப்பாவுக்கு நாணயத்தை வெளியிட மத்திய அரசையும், அதன் அமைச்சர்களையும், பாஜகவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கிறார். ஆனால், நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்காதபோது இப்படி அவரை மத்திய அரசை வலியுறுத்த வில்லை. கீழே இறங்கி சென்று உதவி கேட்கவில்லை.

ஆனால், அப்பாவின் நாணயம் வெளியிடும் விழாவுக்கு கீழே இறங்கி சென்று பாஜகவினர் அனைவரையும் வரவேற்கிறார். கேட்டால், திமுகவினர், மாற்று கட்சியினருக்கு, மாற்று கொள்கை கொண்டவர்களுக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர்கள் என்று காரணம் கூறுகிறார். அப்படியென்றால், நிதி ஆயோக்கை கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தை பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது,” என்று ஆர்பி.உதயகுமார் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, நீதிபதி, தமிழரசன், கருப்பையா மாநில நிர்வாகிகள் ஜெயராமன், புளியங்குளம் ராமகிருஷ்ணன், வெற்றிவேல், தனராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சற்று முன்