Homeதமிழ்நாடுஇன்று முதல் தமிழகத்திற்கு காவிரியில் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு.

இன்று முதல் தமிழகத்திற்கு காவிரியில் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு.

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் இந்த மாதம் முழுவதும் (இன்று முதல் ஜூலை 31-ந்தேதி வரை) தினமும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி நீர் திறந்து விட காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் வாதங்களை கேட்ட பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு 28 சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் நீர் திறப்பது தொடர்பான எந்தவிதமான முடிவுகள் எடுப்பதாக இருந்தால் ஜூலை 25-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடம் போதுமான நீரை திறந்துவிடவில்லை. தற்போது அணைகளில் போதுமான அளவு நீர் உள்ளது. நீர்வரத்தும் போதுமான அளவு உள்ளது. இதனால் நீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 6,972 கன அடி வீதம் நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். நேற்று அணைக்கு வினாடிக்கு 6,141 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 104.30 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,972 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அது போல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். நேற்று காலை அணையின் நீர்மட்டம் 82.68 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 5,118 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த 2 அணையில் இருந்தும் மொத்தம் விநாடிக்கு 6,972 கன அடி வீதம் நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நீர்வரத்தை கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,341 கன அடியாக இருந்த நீர்வரத்து 4,521 கன அடியாக அதிகரித்தது.

சற்று முன்