தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார்.மேலும் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.தற்போது நடிகர் விஜய் திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவர் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார்.
இதற்கிடையே, விஜய் எப்போது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவார் என பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தான் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு வாரத்தில் கட்சி கொடி வெளியிட வாய்ப்புள்ளது. அதாவது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று 100க்கும் அதிமகமானவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அப்போது தான் இன்னும் ஒரு வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் நடிகர் விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாற தயாராகி விட்டார். முன்னதாக கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் பலியாகினர். அப்போது நடிகர் விஜய் நேரடியாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இன்னும் ஒருவாரத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில்,கட்சியின் கொடி எப்படி இருக்கும்? கொடியின் நிறம்? கொடியில் ஏதேனும் படம் இடம்பெறுமா? என்பது பற்றிய எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை. இதனால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உள்பட அனைவருமே நடிகர் விஜயின் கட்சியின் கொடியை எதிர்நோக்கி காத்துள்ளனர்.