தமாகா இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள திறனற்ற திமுக அரசை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். தேர்தல் நேரத்தில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வோம் என்று கூறுவதன் பொருள் இது தான் போலும்.
ஏற்கெனவே அனைத்து விலைவாசிகளும் உயர்ந்துள்ள சூழ்நிலையில் சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் மேலும் மேலும் மின் கட்டண உயர்வு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும். மக்களவைத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் முடியட்டும் என்று காத்திருந்து தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை முதல்வர் வழங்கியுள்ளார். உங்களின் நிர்வாகத் திறமை இன்மையின் சுமையை மக்கள் தலையில் திணிப்பது அநியாயம்.
மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின் கட்டணத்தை உயர்த்துவதால் மின் வாரியத்தின் கடன் சுமை குறையும் என்பார்கள். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று மின் கட்டணத்தை உயர்த்தியது முதல் இன்று வரை மின்வாரியத்தின் கடன் சுமை குறையவே இல்லை, ஏன்? வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் எங்கே செல்கிறது? மின்சாரம் என்பது அவசியம். உணவு, உடை எவ்வளவு முக்கியமோ அதை விட மின்சார தேவை முக்கியமாக உள்ளது. அரசுக்கும் இது தெரியும். மின் பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இது அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே மின்சார கட்டண உயர்வு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஏற்பட்ட பாதிப்பாக மாறி உள்ளது. மின்சாரம் இல்லாமல் ஒரு செல்போன் கூட இயக்க முடியாது என்ற சூழலில் கண்டிப்பாக அத்தியாவசிய தேவை பட்டியலில் உள்ள மின்சார கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை.
யூனிட்டுக்கு 20 முதல் 50 காசு என்று உயர்த்தி இருப்பது பார்ப்பதற்கு சாதாரண தொகை போல் இருக்கும் ஆனால் இரண்டு மாதம் முடிவில் நாம் பயன்படுத்தும் மின்சார பயன்பாட்டுக்கு ஏற்ப கணக்கிடும்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாத பட்ஜெட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அரசு இயற்கை முறையில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். தெருவிளக்குகள் முழுமையாக சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் படி ஆவணம் செய்தல் வேண்டும். இதன் மூலம் மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்துவதுடன் வீடுகள் தொழிற்சாலைகளுக்கு தடையில்லாமல் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க முடியும். எந்த தேவையாக இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் தேவைப்படும் பட்சத்தில் அதிக அளவு உற்பத்தி செய்து குறைந்த கட்டணத்தில் வழங்குவதே ஒரு நல்ல அரசு நிர்வாகத்துக்கு அழகு. அதனால் மீண்டும் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பதன் மூலம் திமுக அரசின் நிர்வாக திறமை கேள்விக்குறியாகி உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின், முதல்வர் ஆன பின் அதே தவறை ஆண்டுதோறும் செய்து வருவது வாக்களித்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதி ஆகும். எனவே மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.