கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணை நிரம்பியதால் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட நீர் நேற்று கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதி வந்தடைந்தது.
தருமபுரி காவிரி ஆற்றில் 4 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி திறக்க முடியாது என்றும், விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக தற்போது காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை தமிழக எல்லைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்தது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் தமிழக எல்லை வந்தடையும் பொழுது நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து தற்போது பத்தாயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று இரவு ஒகேனக்கல்லை வந்தடைந்த காவிரி நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை மேட்டூர் அணைக்குச் சென்றடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்திற்கான நீர் பங்கீட்டை வழங்காமல், மழையால் உபரி நீரை கர்நாடகா திறப்பதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.