Homeதமிழ்நாடுவிக்கிரவாண்டி இடை தேர்தலை அடுத்து மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

விக்கிரவாண்டி இடை தேர்தலை அடுத்து மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை பெற்று நூறு விழுக்காடு வெற்றியை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெற்றது சாதாரண வெற்றி அல்ல. பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் நாம் வெற்றி பெற்றோம். அதிமு கூட்டணி படுதோல்வி அடைந்தது.

இந்த சூழலில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவாவை நாம் நிறுத்தினோம். நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் இருந்து எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் படுதோல்வியை சந்திப்போம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக தனது அணியில் பாமகவை போட்டியில் களமிறக்கியது.. இடைத்தேர்தலில் இனி நிற்பதே இல்லை என்று வைராக்கியமாக இருந்த பாமக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன்வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.

தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்ட பாஜக அணி, திமுக மீது, குறிப்பாக என் மீது பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி பிரச்சாரம் செய்தது. தங்களின் 100 விழுக்காடு தோலவியை மறைப்பதற்காக மிக கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி மேற்கொண்டது. ஆனால், பொய் வேஷக்காரர்களின் பகல்வேஷப் பரப்புரையை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டி அடித்துள்ளார்கள். இந்த விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. இந்த மகத்தான வெற்றியை தந்த விக்கிரவாண்டி மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும், இந்த வெற்றிக்காக உழைத்த திமுக தொண்டர்களுக்கும், அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சற்று முன்