அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆட்சிப்பொறுப்பேற்ற 38 மாதங்களில் மூன்று முறை மின்கட்டண உயர்வு, இருமடங்கு வீட்டுவரி மற்றும் சொத்துவரி உயர்வு, பலமுறை பால் பொருட்கள் விலை உயர்வு, பல மடங்கு பதிவு கட்டணங்கள் உயர்வு, விண்ணை முட்டும் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு என்று தி.மு.க. அரசு தமிழக மக்களை பல வகைகளில் சிரமப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களை வானளாவ உயர்த்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது இந்த அரசு. இதன் மூலம் தமிழக மக்களின் சொந்த வீடு என்ற எண்ணத்தை கனவாகவே நீர்த்துப்போக செய்துள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக திரும்ப பெற்று, பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.