அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நேப்பியர் பாலம் அருகில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர், கட்டி முடிக்கப்பட்ட ஒரு சில மாத காலத்திற்குள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.மக்கள் வரிப் பணத்தில் தரமில்லாத தடுப்புச் சுவர் கட்டப்பட்டதால் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது. ஆகவே, இந்த தடுப்புச் சுவர் கட்டப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தியும், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைகின்ற வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை ஒன்றினை கட்டித்தர தி.மு.க. அரசை வலியுறுத்தியும்,அ.தி.மு.க. திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் வருகிற 5-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.35 மணியளவில், கொள்ளிடம் பாலம் அருகில், எண்.1 டோல்கேட் என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அமைப்புச்செயலாளர் விஜயபாஸ்கர் தலைமையிலும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.