திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா, மற்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில் நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று (27-ம் தேதி) முதல் 31-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கடந்த 23-ம் தேதி அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் சார்பில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படித் திருவிழா ஆகிய 2 திருவிழாக்களின்போது சிறப்பு வழி தரிசனக் கட்டணம் ரூ.200-யை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கட்டணத்தை மாற்றி அமைத்திட கோவில் நிர்வாகம் சார்பில் அரசின் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு தரிசன நுழைவுக் கட்டணம் ரூ. 200-ஐ குறைத்து ரூ.100 ஆக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.