கடந்த வாரம் பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் வார இறுதி மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி வார இறுதியை முன்னிட்டு ஜூலை 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து ஜூலை 26 ஆம் தேதி முதல் திருவண்ணாமலை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு 260 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து ஜூலை 27 ஆம் தேதி முதல் 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் கோயம்பேட்டிலிருந்து வேளாங்கண்ணி, பெங்களூரு மற்றும் நாகைக்கு ஜூலை 26 மற்றும் 27-ல் 65 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மக்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக அனைத்து இடங்களில் இருந்தும் ஜூலை 28 ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளனதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை, சேலம், கோவை, பெங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, பெங்களூருவுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in மற்றும் tnstc app மூலம் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.