தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடக்கு கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது, மரங்கள் வேரோடு சாய்வது, சிறிய அளவிலான நிலச்சரிவு சம்பவங்கள் ஆகியவை பதிவாகியுள்ளன.
வயநாடு மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக 29 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 700க்கும் மேற்பட்டோர் 22 முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதி வழியாக ஓடும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாய நிலங்களும் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இரண்டு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது.
ரெட் அலர்ட் என்பது அடுத்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கும் அதிகமான கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதைக் குறிக்கிறது. ஆரஞ்சு அலர்ட் என்பது மிகக் கனமழை அதாவது 6 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்பதைக் குறிக்கிறது. மஞ்சள் அலர்ட் என்பது 6 முதல் 11 செமீ வரை அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதைக் குறிக்கிறது.
எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.