திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழகத்தின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திமுக தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி பெற்றது. சாதாரண வெற்றியல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி, பாதாளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம்.
விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி உடல்நிலை காரணமாக மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திமுகவின் வெற்றி வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்தோம். மக்களவைத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பாமகவை நிறுத்தியது.
‘இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை’ என்று வைராக்கியமாக இருந்த பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திமுகவே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேரகாலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் க.பொன்முடி, எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள். எம்பி எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள். பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் தேர்தல் பரப்புரை செய்தார்கள். நமது இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்கள்.
இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சித் தோழர்களும், உதயசூரியனின் வெற்றிக்கு இரவு பகல் பாராது கண்துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொன் கவுதமசிகாமணி உள்ளிட்ட ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டக் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக.
அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது.தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை 2019-ம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது. திமுக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது.
இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது. நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும், வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம்.மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.