- Advertisement -
தமிழ்நாடு

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

சட்டசபையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்தபின் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.102 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கூடுதல் விளையாட்டுகள் இந்தாண்டு சேர்க்கப்படும். கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மினி ஸ்டேடியம் அமைக்கப்படாத சட்டமன்ற தொகுதிகளில் ஸ்டேடியம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 210 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 16 பேர் தேர்வு பெற்றுள்ளனர். கடந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த முறை ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் கோவையைச் சேர்ந்த சைக்கிளிங் வீராங்கனை தமிழரசிக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் அதிநவீன சைக்கிள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதன் விளைவாக 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை தமிழரசி வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை மத்தியப்பிரதேசத்தில் நடத்த ரூ.25 கோடியை அம்மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கியது. ஆனால் தமிழ்நாட்டில் நடத்த ரூ.10 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட், கிரிக்கெட் என்றால் தோனி, அதைபோல் அரசியல் களம் என்றால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.

- Advertisement -
Published by

Recent Posts