அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு கூட்டுறவுத் துறையில் உள்ள 4456 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 115 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடன்கள் வழங்குதல், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2938 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் இருப்பில் உள்ளன. டிராக்டர், மினி டிராக்டர், நெல் நடவு எந்திரம், நெல் அறுவடை எந்திரம், கரும்பு அறுவடை எந்திரம், தானியங்களை தூற்றி சுத்தம் செய்யும் எந்திரங்கள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்ட விவசாய எந்திரங்களும், பவர் டில்லர், ரோட்டோ வேட்டர் தெளிப்பான்கள் உள்ளிட்ட விவசாய கருவிகளும் உள்ளன.
விவசாய பெருமக்கள் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் விவசாயிகளின் கை பேசிக்கு, எந்திரங்கள் மற்றும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான குறுந் தகவல் அனுப்பப்படும். முன்பதிவு செய்து, குறித்த தேதி மற்றும் நேரத்தில் விவசாயிகள், வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தலாம்.
மேலும் விவசாயிகள் rcs.tn.gov.in இணையதளத்தின் மூலம் Coop e-வாடகை சேவை மூலமும் பதிவு செய்து பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.