டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐ-போனை திறக்க ஆப்பிள் நிறுவனத்திடம் அமலாக்கத் துறை உதவி கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பார்க்கலாம்.
2024 மார்ச் 21ஆம் தேதி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத் துறை நடத்திய பல மணிநேர விசாரணையைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது தனது செல்போனை அணைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதை திறப்பதற்கான பாஸ்வேர்டை பகிர மறுத்துவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை பயனர் தனியுரிமையின் அடிப்படையில் திறக்க மறுத்ததன் மூலம், மதுபான ஊழல் வழக்கில் அமலாக்க துறையின் விசாரணையில் ஆப்பிள் நிறுவனம் ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், “செட் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி போனின் உரிமையாளரால் மட்டுமே தரவை அணுக முடியும் என்று ஆப்பிள் உறுதிபடுத்தியதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையின்படி, கெஜ்ரிவாலின் தொலைபேசியைத் திறக்க பல முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, அமலாக்கத்துறை தொழில்நுட்ப நிறுவனத்தை ‘அதிகாரப்பூர்வமற்ற முறையில்’ அணுகியுள்ளது.
மேலும், எழுத்துப்பூர்வ தகவல் எதுவும் இல்லாவிட்டாலும், ஆப்பிள் நிறுவனத்திடம் “கெஜ்ரிவாலின் போனைத் திறக்க உதவி கேட்கப்பட்டது” என்றும், ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, உதவி மறுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, இது போன்று கோரிக்கை நிராகரிக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எடை குறைந்தாரா கெஜ்ரிவால்?
இதற்கிடையில் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் 4.5 கிலோ வரை எடை குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த திகார் சிறைச் சாலை, “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அவரது உடலுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உடல் எடை 4.5 கிலோ குறையவில்லை. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவைதான் சாப்பிடுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அடைப்பு
திகார் சிறைச்சாலையின் எண் 2-ல் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், “டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை சதிகாரர் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த நிலையில், டெல்லி கலால் கொள்கை மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தின் (ED) காவலில் இருந்து உடனடியாக விடுவிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.
கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, வரும் மக்களவைத் தேர்தலில் முதலமைச்சரால் பங்கேற்க முடியாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாதிட்டார்.