ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பது, அதற்காக பின்பற்ற வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.
நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக இப்போது வயதானவர்களை குறிவைத்து மோசடிகள் நடைபெறுகின்றன. சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 77 வயதான மூதாட்டி ஒருவர் இந்த ஆன்லைன் மோசடியில் சிக்கி ரூ.1.2 கோடி பணத்தை இழந்துள்ளார்.
மூதாட்டியின் பெயரில் சட்டவிரோத சிம் கார்டு இருப்பதாக கூறி, இதுதொடர்பாக மும்பை காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவரை பயமுறுத்தி லாவகமாக வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
வயதானவர்கள், தொழில்நுட்பம் தெரியாதவர்கள் இதற்கு இரையாகிறார்கள். இந்நிலையில், ஸ்மார்ட் போன் மற்றும் வங்கி கணக்குகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.
முதலில், அவர்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வங்கிக் கணக்கை எப்படி பாதுகாப்பது பயன்படுத்துவது என்று கூற வேண்டும்.
மேலும் தொலைபேசி வாயிலாக யார் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு விவரங்களை கேட்டாலும் சொல்லக் கூடாது என்று கண்டிப்பாக சொல்ல வேண்டும். அடுத்து அவர்களின் ஸ்மார்ட் போனில் லாக் மற்றும் பாதுகாப்பு அம்சத்தை உறுதி செய்யவும்.