BSNL 4G services in India : பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) வரும், ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது அரசாங்கத்தின் “ஆத்மநிர்பர்” கொள்கையின்படி முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான சோதனை கட்டத்தில் பி.எஸ்.என்.எல் (BSNL) அதிகாரிகள் 4G நெட்வொர்க்கில் 700 மெகாஹெர்ட்ஸ் (MHz) மற்றும் 2,100 MHz இன் பிரீமியம் ஸ்பெக்ட்ரம் பேண்டுகளைப் பயன்படுத்தி வினாடிக்கு 40-45 மெகாபிட் வேகத்தை அடைந்தனர்.
பஞ்சாப்பில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை
பஞ்சாபில், பி.எஸ்.என்.எல் ஏற்கனவே 4G சேவைகளை டி.சி.எஸ் மற்றும் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி அமைப்பான C-DoT தலைமையிலான ஒரு கூட்டமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏறக்குறைய 8,00,000 சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
மேலும், பி.எஸ்.என்.எல் ஆனது டி.சி.எஸ், தேஜாஜ் நெட்வொர்க் (Tejas Networks) மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஐ.டி.ஐ (ITI) நிறுவனங்களுக்கு 4G நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்காக சுமார் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
விரைவில் 5ஜி சேவை
இது எதிர்காலத்தில் 5Gக்கு மேம்படுத்தப்படலாம். இந்த நிலையில், தேஜாஸ் நெட்வொர்க்குகளின் செயல் இயக்குனரும், சிஓஓவுமான அர்னோப் ராய் கூறுகையில், “சி-டாட் கோர் இன்னும் அணுக முடியாத நிலையில் உள்ளது.
தற்போது பி.எஸ்.என்.எல் (BSNL) தற்போது இந்தியா முழுவதும் 4G மற்றும் 5G சேவைகளுக்காக 112,000 டவர்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது” என்றார்.
மேலும், “நிறுவனம் ஏற்கனவே நாடு முழுவதும் 4G சேவைகளுக்காக 9,000 டவர்களை நிறுவியுள்ளது. பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஹரியானா வட்டங்களில் 6,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ளன” என்றார்.
கடந்த 4-5 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் 4ஜி திறன் கொண்ட சிம்களை வழங்கி வருகிறது. இதனால் பழைய சிம் கார்டுகளை வைத்திருப்பவர்கள் அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.