Cellphone Hole: இந்த துளை நீங்கள் இயர்போன் மாட்டும் இடத்துக்கு அருகில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது செல்போன் தயாரிப்பின் குறைபாடு, உங்களுடைய போன் செயலிழந்து போவதற்காக அறிகுறி என்ற கட்டுக்கதைகளுடன் பல்வேறு விதமான வீடியோக்கள் யூட்யூப்பில் கிடைக்கிறது.
உங்களுக்கு தெரியுமா? : செல்போன்கள் இல்லாத குடும்பம் இல்லை என்பது போய், குடும்ப உறுப்பினர்கள் இல்லை என மாறிவிட்டது. அந்த அளவுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்ட்ராய்டு போன்களில் புகுந்து விளையாடுகிறார்கள். படித்தவர்கள் மட்டுமில்லை, படிக்காதவர்களும் செல்போன் மூலம் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர். இத்தகைய போன்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் புதிய தொழில்நுட்பத்தோடு புதிய டிசைன்களில் போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்கிறார்கள். ஆனால் இத்தகைய போன்களின் வடிவமைப்பை நன்கு கவனித்தால் அவற்றில் கீழ் அல்லது மேற்பகுதியில் சிறிய துளை ஒன்று கண்ணுக்கு தெரியாத வகையில் இடம் பெற்றிருப்பதை காணலாம். இது எதற்கு என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவென்று நாம் பார்க்கலாம்.
என்னவாக இருக்கும்?
இந்த துளை நீங்கள் இயர்போன் மாட்டும் இடத்துக்கு அருகில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது செல்போன் தயாரிப்பின் குறைபாடு, உங்களுடைய போன் செயலிழந்து போவதற்காக அறிகுறி என்ற கட்டுக்கதைகளுடன் பல்வேறு விதமான வீடியோக்கள் யூட்யூப்பில் கிடைக்கிறது. இது வாடிக்கையாளர்களிடையே ஒருவித அச்ச உணர்வையும் உண்டாக்குகிறது.
அந்த சிறிய துளை நம் போனில் ஸ்பீக்கர்களால் ஏற்படும் இரைச்சலை குறைப்பதற்கு ஆகும். மைக்ரோபோன் என சொல்லப்படும் அதுதான் நாம் செல்போனில் பேசும்போது நம்மை சுற்றி காணப்படும் சத்தங்களை ஃபில்டர் செய்து விட்டு நம்முடைய வார்த்தைகளை எதிர்முனையில் இருப்பவர்கள் தெளிவாக கேட்க வைக்கிறது.எனவே என்னவென்று தெரியாமல் முள், ஊக்கு போன்ற கூர்மையான பொருட்களை கொண்டு இந்த மைக்ரோபோனை சேதப்படுத்த வேண்டாம். மேலும் சார்ஜர் போர்டர், இந்த மைக்ரோபோன், இயர்போன் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்படி சுத்தம் செய்யலாம்?
செல்போனை நாம் பல்வேறு இடங்களிலும், சூழலிலும் பயன்படுத்துவதால் அதனுள் அழுக்குகள் உருவாகிறது. இதனை சரியாக பரிமாரித்து சுத்தம் செய்ய சர்வீஸ் செண்டர்களில் கொடுப்பதே சிறந்தது.
அதுமட்டுமல்லாமல் செல்போன் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டும் என்றால் வெளிப்புற பகுதியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். நமது கைவிரல்கள், கன்னம் உள்ளிட்ட இடங்கள் பட்டு ஏற்படும் ஈரப்பதத்தில் தூசுகள் மிக எளிதாக ஒட்டிக்கொள்கிறது. எனவே இதனை துடைக்க மெல்லிய துணிகளை பயன்படுத்துங்கள். ரசாயனம் கலந்த தண்ணீரை பயன்படுத்தும்போது திரை பாதிப்படையலாம் என்பதால் தகுந்த ஆலோசனையை பெறுங்கள்.
மேலும் செல்போனை நேரடி சூரிய ஒளியில் வைக்கவே கூடாது. இதனால் செல்போன் பாகங்கள் அதிகளவில் சூடாக வாய்ப்புள்ளது. கடும் குளிரும் பேட்டரி திறனை குறைக்கும் என்பதால் மிதமான தட்பவெப்ப நிலையில் செல்போன் வைத்திருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.