Smartphones: எப்போதும் செல்போனை உங்கள் முகத்துக்கு அருகில் வைக்காதீர்கள். அதேபோல், சாதனத்திலிருந்து அதிக வெப்பம் வருவதை உன்னிப்பாக கவனிக்கவும். குறிப்பாக சார்ஜ் செய்யும் போது தொட்டு பார்த்தால் சில நேரங்களில் செல்போன் சூடாக இருக்கும்.
ஸ்மார்ட்போன்கள்: கடந்த 10 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சி என்பது கணிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் சென்று விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்கள் இல்லாத நபரை குடும்பத்தில் எண்ணி விடும் அளவுக்கு நிலைமை உள்ளது. விலை குறைவானது முதல் லட்சக்கணக்கிலும் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாதம் ஒருமுறை பல்வேறு அப்டேட்டுகளுடன் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு தான் வருகின்றது. ஆனால் அவ்வப்போது செல்போன்கள் வெடிப்பது, தீப்பிடிப்பது, ஸ்கீரினில் கோடு விழுவது என இதில் பல பிரச்னைகளும் இல்லாமல் இல்லை. செல்போன்கள் வெடிப்பதால் உயிர்கள் பறிபோகும் நிலையும் உண்டாகிறது. செல்போன்கள் வெடிப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கும் என்பது பற்றி காணலாம்.
பல காரணங்கள்
ஸ்மார்ட்போன்கள் தீப்பிடிக்க அல்லது வெடிக்க பல காரணங்கள் உள்ளது. தற்போதுள்ள ஸ்மார்ட்போன்கள் இன்பில்ட் பேட்டரிகளுடன் வெளிவருகிறது. இந்த பேட்டரிகள் லித்தியம்-அயன் பேட்டரிகளாக செயல்படுகிறது. இவை சார்ஜ் செய்ய அனுமதிக்கும் போது நேர்மறை மற்றும் எதிர்மறை மின்முனைகளில் சமநிலையைக் கொண்டுள்ளன. இதில் ஏதேனும் தவறு நடக்கும்போது தான் பேட்டரியின் உள்ளே எதிர்வினையை உண்டாகி தீப்பிடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
பேட்டரி திறன் அதிகம் என்பதால் செல்போன்களை மணிக்கணக்கில் உபயோகிப்போம். ஏற்கனவே பேட்டரி செயல்படும் அதே நேரம் உள்ளே இருக்கும் திரை, விளக்குகள் எல்லாம் செயல்படும். இதனால் நீண்ட நேரம் உபயோகித்தால் செல்போன்கள் சூடான நிலைக்கு செல்கிறது. அது போனின் பாகங்களின் இரசாயன பகுதிகளை அழித்துவிடும். அதனால் இன்னும் அதிக வெப்பம் உருவாகி இறுதியில் செல்போன் தீப்பிடிக்க அல்லது வெடிக்கச் செய்யலாம்.
செல்போனை அதிக நேரம் வெயிலில் வைப்பது, மால்வேர் சிபியு அதிகமாக வேலை செய்வது அல்லது சார்ஜிங் செயலிழப்பு ஆகியவை சாதனத்திற்குள் ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தலாம். மேலும் பேட்டரிகள் காலப்போக்கில் சிதைவடைகின்றன. எனவே ஒரு சாதனம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டால் உட்புற சாதனங்கள் தொய்வடைவது இயற்கையான ஒன்று தான். இதனால் பேட்டரி வீக்கம் மற்றும் அதிக வெப்பமடைவதற்கு வழிவகுக்கும்.
எச்சரிக்கைக்கான அறிகுறிகள்
ஸ்மார்ட்போன் உள்ளே பிரச்னை என்பதை சில அறிகுறிகள் நாம் அறிந்துக்கொள்ளலாம். செல்போனில் இருந்து வரும் சத்தம் அல்லது உறுத்தும் சத்தம் அல்லது பிளாஸ்டிக் அல்லது ரசாயனங்கள் எரியும் வாசனையை போன்றவற்றை நீங்கள் உணர தொடங்கினால் அது சேதமடைந்து வெடிக்கும் தருவாயில் இருப்பதை அறியலாம். எப்போதும் செல்போனை உங்கள் முகத்துக்கு அருகில் வைக்காதீர்கள். அதேபோல், சாதனத்திலிருந்து அதிக வெப்பம் வருவதை உன்னிப்பாக கவனிக்கவும். குறிப்பாக சார்ஜ் செய்யும் போது தொட்டு பார்த்தால் சில நேரங்களில் செல்போன் சூடாக இருக்கும். அப்படியான சமயத்தில் உடனடியாக அதை எடுத்து விட வேண்டும்.
மிகப்பெரிய எச்சரிக்கை அறிகுறி என்னவென்று பார்த்தால் வீங்கிய பேட்டரி ஆகும். இது சேதமடைந்தாலோ அல்லது உள் செல்போன் சாதனங்கள் சிதைந்தாலோ நிகழலாம். தற்போதைய நவீன ஸ்மார்ட்போன்கள் இனி பேட்டரியை அகற்ற உங்களை அனுமதிக்காது என்பதால் சூடாக இருப்பதாக உணர்ந்தால் அதனை வெதுவெதுப்பான இடத்துக்கு மாற்றுங்கள். மேலும் இணையம் உள்ளிட்ட சேவைகளை சிறிது நேரத்துக்கு அணைத்து வைக்கவும். மேலும் ஸ்கீரினின் வெளிச்ச அளவை குறைப்பது. தேவையில்லாத செயலிகளின் இயக்கத்தை நிறுத்துவது என பல விஷயங்களை மேற்கொண்டால் செல்போன் வெடிப்பு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.