Homeதொழில்நுட்பம்தொழில்நுட்ப மோசடி. youtube-ன் மூலம் 76 லட்சம் இழந்த சோக கதை.

தொழில்நுட்ப மோசடி. youtube-ன் மூலம் 76 லட்சம் இழந்த சோக கதை.

Online Scam | வங்கி விவரங்கள் திருடப்படுவதன் மூலம், வங்கி கணக்கில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் நிதி நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இது பலரின் வாழ்க்கையையே புரட்டி போடும் அபாயத்தை கொண்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதில் பல ஆபத்துகளும் நிறைந்துள்ளன. அதில் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியது சைபர் குற்றங்கள். தொழில்நுட்பம் மூலம் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அதன் மூலம் ஒருவரின் தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்கள் திருடப்பட்டு மோசடி சம்பங்கள் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக வங்கி விவரங்கள் திருடப்படுவதன் மூலம், வங்கி கணக்கில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் நிதி நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இது பலரின் வாழ்க்கையையே புரட்டி போடும் அபாயத்தை கொண்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் யூடியூப் மூலம் ரூ.76.5 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல்கள்
கடினமாக உழைத்தால் மட்டுமே கை நிறைய ஊதியம் பெற முடியும் என்ற நிலை மாறி, கூரிய சிந்தனை மற்றும் செயலாற்றும் திறன் இருந்தாலே அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை தொழில்நுட்ப வசதிகள் சாத்தியமாக்குகின்றன. இதனை மோசடிக்காரர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கின்றனர். அதாவது, பொதுமக்கள் மத்தியில் எளிதாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, ஸ்டாக் மார்கெட் உள்ளிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்தி மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

மோசடியில் சிக்கிய மருத்துவர்
அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் யூடியூப் மூலம் ரூ.76.5 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அந்த மருத்துவர், அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஸ்டாக் மார்க்கெட்டில் எளிதாக பணம் சம்பாதிக்கும் வழியை கற்றுக்கொள்வதற்காக யூடியூபில் சர்ச் செய்துள்ளார். அப்போது, ஸ்டாக் மார்கெட் தொடர்பாக யூடியூபில் ஒரு விளம்பரம் தோன்றியுள்ளது. மருத்துவரும் அந்த விளம்பரத்தை கிளிக் செய்துள்ளார். அப்போது அது மருத்துவரை ஒரு வாட்ஸ்அப் குழுவிற்கு அழைத்துச் சென்றுள்ளது.

திட்டமிட்டு மோசடியை அரங்கேற்றிய கும்பல்
அந்த குழுவில் இருக்கும் நபர்கள் தங்களை முதலீட்டாளர்கள் போல் காட்டிக்கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி, ஸ்டாக் மார்க்கெட்டில் எவ்வாறு முதலீடு செய்வது என்றும் அந்த குழுவில் அவர்கள் விவாதித்துள்ளனர். அதற்கான ஸ்கிரீன் ஷாட்களையும் குழுவில் பகிர்ந்துள்ளனர். அதனை கண்டு உர்சாகம் அடைந்த மருத்துவர், தானும் முதலீடு செய்ய விரும்பியுள்ளார். இந்த நிலையில், ஆரம்ப காலத்தில் ஆன்லைன் வணிகம் செய்வதற்கான டிப்ஸ்களை வழங்கியுள்ளது. அதனை பயன்படுத்தி மருத்துவர் லாபம் பெற ஆரம்பித்துள்ளார். இதனால் ஆன்லைன் வணிகத்தின் நம்பிக்கை அடைந்த மருத்துவர், ஸ்டாக் மார்க்கெட்டில் வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ளார்.

முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பெற முடியும் என குழுவில் இருந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதாவது முதலீடு செய்தால் 30 சதவீதம் வரை லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய மருத்துவர் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார். அக்டோபர் 3வது வாரத்திற்கு சுமார் ரூ.76.5 லட்சம் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி மருத்துவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் பணம் எடுக்க முடியாமல் போயுள்ளது. பலமுறை முயற்சித்தும் தோல்வியை சந்தித்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்