சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் புகழும், மார்க்கெட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

தோனியின் ஒரு புதிய புகைப்படம் வெளிவந்தால் கூட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதிய விளம்பர ஒப்பந்தங்கள், புதிய தொழில்கள் என்று பொருளாதார ரீதியாகவும் தோனி உச்சத்தில் இருக்கிறார்.

இப்படி உச்சத்தில் இருக்கும் தோனியின் தன்னுடன் விளையாடிய சக வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு காரணமானவர் என்று ஏராளமான வீரர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்துள்ளனர்.

குறிப்பாக 2007 முதல் 2011 வரை தோனியுடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய வீரர்கள் இப்படி கூறிய விவகாரம் அவரின் புகழில் ஒரு கரும்புள்ளியாக உள்ளது.

அந்த வகையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய கம்பீர், தோனியை ஏராளமான முறை கடுமையாக சாடியுள்ளார். 

கவுதம் கம்பீர் டெஸ்ட் போட்டிகளில் சொந்த சாதனைகளுக்காக விளையாடியதாக தோனி புகார் கடிதம் அளித்ததே இந்த மோதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

அதேபோல் 2008 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சச்சின், கம்பீர் மற்றும் சேவாக் ஆகியோரின் ஃபீல்டிங் ஸ்லோவாக இருப்பதால், சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்குவோம் என்று தோனி வெளிப்படையாகவே கூறினார்.

அதற்கு அடுத்த போட்டியிலேயே ஸ்பிப் திசையில் அபார கேட்சை பிடித்த சேவாக், எனது ஃபீல்டிங்கை பார்த்தீர்களா என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டு பதிலடி கொடுத்தார்.

அப்போது முதல் தோனியுடன் தொடங்கிய மோதல், 2012 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தனித்தனி குழுக்களாக பிரிந்து பயிற்சி செய்யும் அளவிற்கு சென்றது. 

அந்த குழுவில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியில் இருந்து காரணமின்றி என்னை தோனி விலக்கியதாக பலமுறை அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

தொடர்ந்து தோனியின் தளபதியாக இருந்த யுவராஜ் சிங், 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு கேப்டனாக பிசிசிஐ என்னை தான் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் தோனியை தேர்வு செய்தது ஆச்சரியமாக உள்ளது என்று வெளிப்படையாக கூறினார்.

யுவராஜ் சிங்கின் தந்தை ஒருபடி மேல் சென்று, யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர தோனியே காரணம் என்று விமர்சித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை அறிந்துகொள்ள