- Advertisement -

இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி… தடை செய்யவும் வாய்ப்பு… விதிமீறலால் ஏற்பட்ட விளைவு

குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் 9 லீக் ஆட்டங்களில் விளையாடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

இப்படி இந்த உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இலங்கை நாட்டின் அரசாங்கம் அவர்களது கிரிக்கெட் சார்ந்த நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. அதோடு அவர்களது கிரிக்கெட் வாரியத்திற்குள் அரசாங்கத்தின் தலையீடும் அதிகமானது. இப்படி அரசியல் தலையீடு கிரிக்கெட் நிர்வாகத்திற்க்குள் வரக்கூடாது என்று தெரிவித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளது.

- Advertisement -

ஐசிசி வெளியிட்ட இந்த கருத்தின் படி : தற்போதைக்கு அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும் இதே நிலை தொடர்ந்தால் இலங்கை அணியை தடை செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் 50 ஓவர் போட்டிகளை முடித்துக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு டிசம்பர் வரை எந்த ஒரு சர்வதேச போட்டிகளும் கிடையாது. எனவே அதுவரை அவர்களுக்கு எந்த ஒரு சிக்கலும் ஐசிசி-யிடம் இருந்து வராது. அதற்குள் நவம்பர் 18 முதல் 21-ம் தேதி வரை அகமதாபாத்தில் ஐசிசி நிர்வாக கூட்டம் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த நிர்வாக கூட்டத்தில் இலங்கை அணி நிர்வாகத்திற்குள் அரசியல் தலையீடு இருப்பது குறித்து பேசப்படும். ஒருவேளை அதற்குள் இந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளவில்லை என்றால் நிச்சயம் அந்த கூட்டத்தில் இலங்கை அணியை தடை செய்வது குறித்து அதிகாரபூர்வமாக பேசப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஐசிசி போர்ட் இலங்கை அணியின் விதிமுறை மீறல் குறித்து ஆலோசிக்கவும் உள்ளது.

தற்சமயம் இலங்கை அணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக icc அறிவித்துள்ளதால் போட்டிகளில் பங்கேற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்த முறையான அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்திற்குள் அரசியல் தலையீடு இருந்ததனால் அந்த அணி தடை செய்யப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்தது. அதற்கடுத்து இலங்கை அணி இந்த நிலையை சந்தித்துள்ளது. இருப்பினும் வெகுவிரைவாக அவர்களும் இந்த குறைகளை கடந்து மீண்டு வருவார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts