இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
அந்த வகையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை அக்டோபர் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையின் போது அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியிருந்தது.
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இம்முறை சொந்த மண்ணில் அவர்களை நிச்சயம் இந்திய வீழ்த்த வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டிக்கு முன்னதாக நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அளித்துள்ள ஒரு பேட்டியில் : இந்த உலகக் கோப்பைக்காக வெற்றிக்காக இந்திய நாடே காத்து கொண்டிருக்கிறது. கடைசியாக நம் சொந்த மண்ணில் கோப்பையை வென்று 12 ஆண்டுகள் ஆகிறது. மக்கள் மீண்டும் ஒரு வெற்றிக்காக தற்போது காத்திருக்கின்றனர்.
நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியும் அதனை நோக்கி சிறப்பாக விளையாடிக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரால் மட்டுமே நியூசிலாந்தை வீழ்த்தி விட முடியாது. இந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டால் அடுத்த கோப்பைக்காக நாம் இன்னும் மூன்று முறை காத்திருக்க வேண்டியிருக்கும்.
அதோடு இந்த உலகக் கோப்பையில் விளையாடும் 7-8 வீரர்கள் உச்சகட்ட பார்மில் இருக்கின்றனர். அதில் ஒரு சிலருக்கு இது கடைசி தொடராக கூட இருக்கலாம். எனவே அனைவரும் சேர்ந்து கோப்பையை கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே நமது அணியின் பந்துவீச்சும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது .