ராஜஸ்தான் அணி கடந்த சீசனில், எந்த இடத்தில் தவறு செய்து பிளே ஆப் வாய்ப்பை இழந்திருந்ததோ, அவற்றை எல்லாம் சரி செய்து இந்த முறை ஏறக்குறைய பிளே ஆப் வாசலின் அருகில் தான் உள்ளனர். பத்து போட்டிகள் மட்டுமே ஆடி முடித்திருந்த ராஜஸ்தான் அணி எட்டு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் பலமாக திகழ்ந்து வருகிறது.
அப்படி ஒரு நிலையில் தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் அருண் ஜெட்லி மைதானத்தில் மோதி இருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த சில போட்டிகளின் முடிவில் இரு அணிகளுமே 200 ரன்களை தொடவில்லை. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 221 ரன்களை எடுத்திருந்தது.
22 வயது ஆகும் தொடக்க வீரர் ஜாக் ஃப்ரேஷர் மீண்டும் ஒருமுறை டெல்லி அணிக்காக அதிரடி அரைச்சதத்தை எடுத்திருந்தார். அவரைப் போலவே மற்றொரு இளம் தொடக்க வீரரான அபிஷேக் போரலும் 65 ரன்கள் எடுக்க கடைசி கட்டத்தில் ஸ்டப்ஸ் அதிரடி காட்டியதால் 200 ரன்களையும் டெல்லி அணி கடந்திருந்தது.
இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி கொஞ்சம் கூட சளைக்காமல் ஆட, விக்கெட்டுகளை ஒரு புறம் இழந்து கொண்டே இருந்தாலும், கேப்டன் சஞ்சு சாம்சன் தனியாளாக போராடி கொண்டிருந்தார். இதனால் ராஜஸ்தான் அணியின் ரன்னும் வேகமாக ஏறிக் கொண்டிருக்க, கடைசி ஆறு ஓவர்களில் 74 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவாகியிருந்தது.
ஆனால் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட சில முக்கிய விக்கெட்டுகள் விழ, 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இதனால், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, தோல்விக்கு பின் பேசியிருந்த சஞ்சு சாம்சன், “போட்டி எங்கள் கையில் இருந்தது என்றுதான் நினைத்தேன். ஒரு ஓவருக்கு 11 முதல் 12 ரன்கள் என்பது நிச்சயம் எட்டக்கூடிய இலக்கு தான். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் இதுபோன்றுதான் சில நேரம் நடைபெறும். 22 ரன்கள் என்பது ஒரு பத்து ரன்கள் அதிகமாக சேஸ் செய்ய வேண்டி தான் இருந்தது. நாங்கள் ஒரு இரண்டு பவுண்டரிகளை குறைவாக கொடுத்திருந்தால் ஒருவேளை வெற்றி கூட பெற்று இருக்கலாம்.
டெல்லியின் தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேஷர் இந்த தொடர் முழுக்க தொடக்க வீரராக என்ன செய்து கொண்டிருக்கியாரோ அதையும் எங்களுக்கு எதிராக செய்திருந்தார். நாங்கள் தோற்ற மூன்று போட்டியுமே நெருக்கமாக வந்து தான் தோல்வி அடைந்திருந்தது. நாங்கள் அபாரமாக ஆடி வந்தாலும் சில விஷயங்களை சரி செய்து கொண்டு நல்ல ஒரு கம்பேக்கை கொடுக்க வேண்டும்.
டெல்லி வீரர் ஸ்டப்ஸை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும். கடந்த 10 முதல் 11 போட்டிகளாக சிறப்பாக பந்து வீசிய சந்தீப் ஷர்மா மற்றும் சாஹல் என எங்கள் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 2 – 3 சிக்ஸர்களை அடித்திருந்தார். நாங்கள் இந்த போட்டியில் எங்கே தோல்வியடைந்தோம் என்பதை அறிந்து அதனை சரி செய்ய வேண்டும் என்பதுதான் இலக்காக உள்ளது” என சஞ்சு சாம்சன் கூறினார்.