- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே அணிக்கு வரப்போகிறாரா சஞ்சு சாம்சன்? வைரலாகும் பதிவு... அஸ்வின் கொடுத்த விளக்கம்

சிஎஸ்கே அணிக்கு வரப்போகிறாரா சஞ்சு சாம்சன்? வைரலாகும் பதிவு… அஸ்வின் கொடுத்த விளக்கம்

- Advertisement 1-

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் முடிவடைந்திருந்த சூழலில், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பார்வை 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பக்கம் திரும்பி உள்ளது.

ஐபிஎல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்றாலும் தற்போதே ஐபிஎல் குறித்த கருத்துக்கள் டிரெண்ட் ஆக முக்கிய காரணம், ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்த வீரர்கள் மற்றும் வெளியேற்றிய வீரர்கள் பட்டியலை வெளியிட்டது தான்.

பிசிசிஐ அறிவுறுத்தலின் படி, அனைத்து ஐபிஎல் அணிகளும் இது தொடர்பான பட்டியலை சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது. அதன்படி, அம்பத்தி ராயுடு, பென் ஸ்டோக்ஸ் உட்பட மொத்தம் 8 வீரர்களை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்து மற்ற வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இதே போல ஒவ்வொரு அணிகளும் அடுத்த ஆண்டில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் திட்டம் போட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது.

இதில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது. மும்பை அணிக்காக ஆட ஆரம்பித்து தான், தனது சர்வதேச பயணத்தையும் ஹர்திக் பாண்டியா ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement 2-

இப்படி பல வியப்பான முடிவுகள், ஐபிஎல் வட்டாரத்தில் அரங்கேறி கொண்டிருக்க, டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தையும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கு மத்தியில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது பற்றிய X தள பதிவு ஒன்று, பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக X தளத்தில் வெளியான பதிவில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறியதாக குறிப்பிட்டு, சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணியின் கேப்டனாகும் படி அணி நிர்வாகம் சார்பில் அணுகியதாகவும் கிட்டத்தட்ட அது உறுதியாகும் தருணத்தில் இருந்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சஞ்சு சாம்சன் அந்த பொன்னான வாய்ப்பை மறுத்து விட்டதாகவும், இதனால் வருங்காலத்தில் நிச்சயம் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆவார் என ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வீடியோவில் கூறியதாக செய்திகள் வெளியாகின.

சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் போவது ஒரு பக்கம் விமர்சனமாக உருவாகியுள்ள தருணத்தில், அஸ்வின் இப்படி கூறியதாக வெளியான பதிவு, எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகமாக்கியது. இதில் மற்றொரு ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்க, அதே அணியில் தான் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெற்றுள்ளார். இந்த விஷயம், மறுபக்கம் ரசிகர்களை குழப்பம் அடையவும் வைத்திருந்தது.

இந்த நிலையில், சஞ்சு சாம்சன் சிஎஸ்கே கேப்டன் ஆகும் வாய்ப்பு குறித்து தான் பேசியதாக வைரலாகும் செய்தியில் உண்மையில்லை என்றும் வதந்திக்காக தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த X பதிவின் கீழ், ரவிச்சந்திரன் அஸ்வின் கமெண்ட் செய்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சற்று முன்