- Advertisement 3-
Homeவிளையாட்டுஇன்னும் பயிற்சி வேண்டுமோ.. இந்தியாவுக்கு விழுந்த பெரிய அடி.. ஈவு இரக்கம் பாக்காமல் நொறுக்கிய சவுத்...

இன்னும் பயிற்சி வேண்டுமோ.. இந்தியாவுக்கு விழுந்த பெரிய அடி.. ஈவு இரக்கம் பாக்காமல் நொறுக்கிய சவுத் ஆப்பிரிக்கா..

- Advertisement 1-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்கள் ஆடி வருகிறது. இதில் ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் முறையே ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தற்போது முதலாவதாக டி 20 தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டிருந்த சூழலில், தற்போது இரண்டாவது டி20 போட்டி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மழைக்கான அறிகுறி இருந்து வந்தது.

தொடர்ந்து எந்தவித பிரச்சனையும் இன்றி போட்டி ஆரம்பமானது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பந்து வீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆகினர். இதனால் தென் ஆப்பிரிக்க மண்ணில் அவர்களின் ஆதிக்கம் தான் இருக்கும் என்றும் கருதப்பட்டது.

ஆனால் பின்னால் வந்த திலக் வர்மா, அதிரடியாக ஆட்டத்தை தொடங்கி வைக்க, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அதனை சிறப்பாக பயன்படுத்தி ரன் சேர்த்தனர். இதனால் இந்திய அணி மெல்ல மெல்ல மீண்டு வந்து ரன் சேர்க்க தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும் (36 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) கடைசி வரை களத்தில் நின்ற ரிங்கு சிங் 68 ரன்களும் (39 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

- Advertisement 2-

இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக, போட்டி நிறுத்தப்பட, நீண்ட நேரம் மழை பெய்தது. சிறிது நேரம் கழித்து மழை நிற்க, இந்திய அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் மழை காரணமாக, தென்னாப்பிரிக்க அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 15 ஓவர்களில் 152 ரன்கள் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.

முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்த தென்னாப்பிரிக்க அணி, 152 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 14 வது ஓவரில் எட்டிப் பிடித்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஹென்ரிக்ஸ் 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதே போல மார்க்ரமும் 30 ரன்கள் சேர்க்க 10 ஓவர்களுக்குள் 100 ரன்களை கடந்தது தென்னாப்பிரிக்க அணி. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் கடைசி கட்டத்தில் போட்டியும் பரபரப்பு உருவானது.

இருந்த போதிலும் கடைசியில் 7 பந்துகள் மீதம் வைத்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. கடினமான இலக்காக இருந்த போதும் அதிரடியாக ஆடி அதனை தென்னாப்பிரிக்க அணி தொட்டது. இன்னும் ஒரு டி 20 போட்டியே மீதம் இருப்பதால் இந்திய அணி அதில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலும் உள்ளது.

சற்று முன்