- Advertisement 3-
Homeவிளையாட்டுடி 20 உலக கோப்பைக்கும் நாங்க ரெடி.. கட்டம் கட்டித் தூக்கிய இந்தியா.. மிரண்டு போய்...

டி 20 உலக கோப்பைக்கும் நாங்க ரெடி.. கட்டம் கட்டித் தூக்கிய இந்தியா.. மிரண்டு போய் அடிபணிந்த ஆஸ்திரேலியா

- Advertisement 1-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. உலக கோப்பை தொடர் முடிந்த ஒரு வாரத்திற்குள்ளே இந்த டி 20 தொடர் ஆரம்பமானதால், இரு அணிகளிலுமே முக்கிய வீரர்கள் ஓய்வில் உள்ளனர். இதன் காரணமாக இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, முகமது ஷமி என பல வீரர்கள் டி 20 தொடரில் கலந்து கொள்ளவில்லை. மேலும், சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி 20 தொடரில் இந்திய அணி களமிறங்கி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு பல இளம் வீரர்களுக்கும் இந்த டி 20 தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ருத்துராஜ், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் என பல இளம் வீரர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பையும் அளித்து வருகின்றனர். இதனிடையே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி 20 போட்டி தற்போது நடந்து முடிந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ருத்துராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். இருந்த போதிலும் ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர்,சூர்யகுமார் யாதவ் என சிறிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் சற்று தடுமாற்றம் கண்டது இந்திய அணி. ஆனாலும், ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடி ரன் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் சிறப்பான ரன்னை எட்டவும் அது உதவி செய்திருந்தது.

20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. அதிகபட்சமாக ரிங்கு சிங் 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்திருந்தார். ஜிதேஷ் ஷர்மா 35 ரன்களும் (19 பந்துகள், 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி) எடுத்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, 3 ஓவர்களில் 40 ரன்கள் குவித்ததால் அவர்கள் எளிதில் வெற்றி பெறுவார்கள் என்றே அனைவரும் கருதினர். ஆனால், அடுத்த 12 ரன்கள் சேர்ப்பதற்குள் ஹெட் உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது.

- Advertisement 2-

இதன் பின்னர், முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் டி 20 தொடரையும் கைப்பற்றி உள்ளது. இளம் வீரர்களைக் கொண்டு சூர்யகுமார் தலைமையில் இறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தூள் கிளப்பி உள்ளது. இன்னும் ஒரு டி 20 போட்டி மீதமுள்ள நிலையில், ஆறுதல் வெற்றிக்காக ஆஸ்திரேலியா போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி 20 தொடர் முடிந்த கையோடு, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்